March 22, 2024

உலக தண்ணீர் தினம் - 2024.03.22 (World Water Day 2024.03.22)

தண்ணீர் பயன்பாட்டின் முக்கியத்துவம்,   குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 22-ம் தேதி ‘உலக தண்ணீர் தினம்’ கொண்டாடப்படுகிறது. 

உயிர்களின் அடிப்படைத் தேவையாக இருக்கும் தண்ணீர், மனிதனுக்கு உணவுத் தயாரிப்பது, குளிப்பது, குடிப்பது உள்ளிட்ட பல்வேறு வகையில் அவசியமானதாக இருக்கிறது. விவசாய, தொழிற்சாலைகள், உற்பத்தி என மனிதனின் அன்றாட வாழ்வில் தண்ணீரின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது.  தொழிற்சாலை வளர்ச்சி, மக்கள் தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையை பல்வேறு நாடுகள் சந்தித்து வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே  தண்ணீர் தினம் கடைபிடிப்பது வழக்கம் தொடங்கியது.

உலக தண்ணீர் தினம் கொண்டாடுவது தொடங்கியது எப்போது?

கடந்த 1992-ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ஐ.நா பொதுச் சபையின் மாநாட்டின் ’ உலக தண்ணீர் தினம்’ கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று  தண்ணீர் தினம் என்ற  தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. 

1993 முதல் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இது நன்னீர் மற்றும் இந்த குறிப்பிடத்தக்க வளத்தின் நிலையான மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

உலகத் தண்ணீர் தினம் - கருப்பொருள்

ஐ.நா. சபை தண்ணீர் மேலாண்மையை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை நோக்கமாக கொண்டுள்ளது. அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர், நீர் மேலாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை குறிப்பிடும்படியே இருக்கும். இந்தாண்டிற்கான கருப்பொருளாக ’Water for prosperity and peace’ அறிவிக்கப்பட்டுள்ளது.

 தண்ணீர் மக்களின் வாழிவில் அமைதியை ஏற்படுத்தும் என்று ஐ.நா. சொல்கிறது. அதன்படி, உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் பல லட்சம் மக்கள் சுகாதாரமான குடிநீர், தண்ணீர் இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு சுகாதாரமான நீர்  கிடைப்பதன் மூலம் அவர்களின்  அன்றாட வாழ்க்கை அமைதியாக இருக்கும். 

உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் தண்ணீர் சமமாக கிடைப்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும். சுகாதாரமான குடிநீர் பெறுவது அனைவரின் சம உரிமையாகும் என்று ஐ.நா. அறிவுறுத்தியுள்ளது. காலநிலை மாறுபாடு, மக்கள் தொகை அதிகரிப்பு உள்ளிட்டவைகள் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. 

தண்ணீர் பயன்பாடு / பற்றாக்குறை குறித்து ஐ.நா. வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள்

  • பூமியின் மேற்பரப்பில் இருக்கும் நீரில் 97.5 சதவீதம் உப்புத் தன்மையானது. 2.5 சதவீதம் மட்டுமே நன்னீர். நன்னீர் ஆதாரம் என்பது எல்லாருக்கும் கிடைப்பது அல்ல. நன்னீரிலும் 1.2 சதவீதம்தான் நுகர்வுக்குரியது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
  • உலகில் 2.2 பில்லியன் மக்கள் சுகாதாரமான குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர்.
  • உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

 பல்வேறு நகரங்கள் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன. பருவநிலை மாறுபாடு, மழைப் பொழிவு குறைவு என ஒருபுறம் இருந்தாலும் தண்ணீர் பயன்பாட்டை நிர்வகிப்பது தனிமனிதரின் பொறுப்பு என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கை கழுவது தொடங்கி பாத்திரம் தேய்ப்பது உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு ஒரு நபருக்கு மொத்தமாக  80 லிட்டருக்கும் அதிகமாக தண்ணீர் வீணாகிறது.

தண்ணீர் வீணாவதை தடுப்பதின் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என ஐ.நா. வெளியிட்டுள்ள ‘உலக தண்ணீர் தினம்’ செய்தியில் அறிவுறுத்தியுள்ளது.

 



Share This :