October 10, 2026

அரச அலுவலர்களின் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பான ஆணைக்குழுவிற்கு புதிய யோசனைகளை உள்ளடக்கிய அறிக்கை சமர்ப்பிப்பு.

அரச அலுவலர்களின் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பான ஆணைக்குழுவிற்கு புதிய யோசனைகளை உள்ளடக்கிய அறிக்கை சமர்ப்பிப்பு.

அதிமேதகு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அமைக்கப்பட்ட அரச அலுவலர்களின் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பான ஆணைக்குழுவிற்கு புதிய “இலங்கை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சேவை” மற்றும் அதற்கான புதிய 'ET' சம்பளக் குறியீடு அடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க யோசனைகளை உள்ளடக்கிய அறிக்கையை “எமது இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் – வடக்கு மாகாணம்” சமர்ப்பித்துள்ளது.

அரச அலுவலர்களின் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பாக நிலவும் நீண்டகால முரண்பாடுகளுக்குச் சிறந்த தீர்வுகளை வழங்கும் பொருட்டு, சுமார் 30 வருடங்களின் பின்பு கிடைக்கப்பெற்ற அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய 2494/05 ஆம் இலக்க 22.06.2026 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி நிறுவப்பட்டுள்ள "அரச அலுவலர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவிற்கு", இலங்கை தொழில்நுட்பவியல் சேவை (SLTS) வகுப்பிற்குள் உள்ளடங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சேவையினர் எதிர்கொள்ளும் சம்பள முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு ஒரு கெளரவமான உயர்ந்தபட்ச தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, விரிவான யோசனைகளை உள்ளடக்கிய அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தொழிற் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ தொழிற்சங்கம் என்ற வகையில் "இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் – வடக்கு மாகாணம்" (SLGTOU - NP) தனது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும், "வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விசேட தரத் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஒன்றியத்தின்" ஆலோசனைகளுடன் இணைந்து யதார்த்தபூர்வமாக ஆய்வு செய்து தயாரித்த இந்த யோசனை அறிக்கையானது, 09.10.2026 அன்று பதிவுத் தபால் மூலமாக ஆணைக்குழுவின் செயலாளருக்கு அதிகாரபூர்வமாக எமது தொழிற்சங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

1. கருத்துப் பகிர்வும் கூட்டு கலந்தாலோசனையும்

கடந்த 29.09.2026 அன்று விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ பகிரங்க அழைப்பின்படி, வட மாகாணத்தைச் சேர்ந்த பல தொழில்நுட்ப உத்தியோகத்தர்களிடம் இருந்தும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விசேட தரத் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களிடம் இருந்தும் பெறப்பட்ட ஆலோசனைகளுடன் திரட்டப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வ யோசனைகள் இவ்வறிக்கையில் முதன்மையாகக் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

2. சம்பள முரண்பாடுகள்

தற்போதைய சம்பளத் திட்டத்தில் நிலவும் சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான யதார்த்தபூர்வமான தீர்வுகள்.

3. தர உயர்வுகள் (Promotions)

பதவி உயர்வுக்கான தெளிவான சம்பள வழிமுறைகள் மற்றும் சேவைக்கால முன்னேற்ற வழிமுறைகள்.

4. ஓய்வூதிய உரிமைகள்

தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பிரத்தியேக ஓய்வூதிய வயத எல்லை.


5. அறிக்கையின் முக்கிய அம்சங்கள் மற்றும் முன்மொழிவுகள்

5.1 தனிச் சேவையாக – “இலங்கை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சேவை” தாபிப்பு:

தனியான "இலங்கை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சேவை" ஒன்றை தாபிப்பதனூடாக, அபிவிருத்தியில் தொழில்நுட்ப அலுவலர்களின் துறைசார்ந்த சேவை, தொழில்சார் கௌரவம், அர்ப்பணிப்பு, பொறுப்புக் கூறல், தரம் மேம்பாடு மற்றும் நவீன மேம்பட்ட தொழில்நுட்பச் செயற்பாடுகளை உறுதிப்படுத்துவது இவ்வறிக்கையின் பிரதான நோக்கமாகும்.

5.2 புதிய 'ET' சம்பளக் குறியீட்டுடனான உயர் சம்பளத் திட்டம்:

தொழில்நுட்ப அலுவலர்களின் தொழிற்களப் பணிகள் மற்றும் தற்காலப் பொருளாதாரத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, “இலங்கை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சேவை”க்கு புதிய 'ET' சம்பளக் குறியீட்டுடனான உயர் சம்பளக் கொடுப்பனவுத் திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.

5.3 பணி மதிப்பீடு மற்றும் ஒப்பீடு (Job Evaluation & Benchmarking):

இதில முன்மொழியப்பட்டுள்ள சம்பளத் தொகைகள் தற்போது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சம்பளத் திட்டங்களாக நேரடியாகக் கருதப்படவில்லை என்பதுடன், எமது அறிக்கையில் உத்தியோகபூர்வ பணி மதிப்பீட்டுப் புள்ளிகளின் (Job-evaluation scores) பணப் பெறுமதியானது, அரசாங்கத்தின் பொருத்தமான தொழில்நுட்ப, தொழில்சார், நிறைவேற்று மற்றும் நிபுணத்துவச் சம்பளக் கட்டமைப்புகளுக்கு எதிராக முறையான ஒப்பீடுகளை (Benchmarking) மேற்கொண்டு முன்மொழியப்பட்டுள்ளதுடன், அவை நேரடி கலந்துரையாடல்கள், ஆய்வுகள் மற்றும் ஒப்பீடுகளூடாக ஆய்வுகள் மேற்கொண்ட பின்னரே அரச அலுவலர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவினால் இறுதி செய்யப்படும்.

5.4 நிதி மற்றும் நிர்வாகத் தாக்கங்கள் (Fiscal & Administrative Implications):

அரசின் நிதி மற்றும் நிர்வாகத் தாக்கங்களைக் கவனத்திற் கொண்டு, நடைமுறைச் சாத்தியமான வழிகளில் இச்சம்பளச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றியுரையும் எதிர்பார்ப்பும்
  • காலக்கெடுவுக்குள் தமது ஆக்கபூர்வமான யோசனைகளை வழங்கி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முன்மொழிவை வலுப்படுத்திய வடக்கு மாகாண தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எமது சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்.

  • அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விசேட தரத் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஒன்றியத்தினருக்கும் எமது சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்.

  • எமக்கு வலுச்சேர்க்கும் வகையில் விரிவான வேறு பல யோசனைகளை உள்ளடக்கிய அறிக்கைகளை அனுப்பிவைத்த, கிழக்கு மாகாண அரச குடிசார் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தினருக்கும், மற்றும் இலங்கை மத்திய மாகாண அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் எமது சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்.

  • மேலும், காலநேரம் பாராது ஆலோசனைகளை வழங்கிய  பிரதம கணக்காளர் அவர்கள்  , மற்றும் வடக்கு மாகாண தொழிற்சங்க சம்மேளனத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அனைவருக்கும் எமது சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்.

இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பிரதான பங்காற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையிலும், கௌரவமான தொழில் சூழலை உருவாக்கும் வகையிலும், அதிமேதகு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அமைக்கப்பட்ட அரச அலுவலர்களின் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பான ஆணைக்குழு இந்த யோசனைகளை விரிவாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதியாக நம்புகின்றோம்.

நன்றி,

இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் – வடக்கு மாகாணம்

(SLGTOU - NP)

2026.10.09


Share This :